Monday, March 6, 2017

Saibaba ஸாயி என்றாலே தமிழ்தரும் பாட்டு

ஸாயி என்றாலே தமிழ்தரும் பாட்டு

திருமுக தரிசனத்தில் அகங்குழையும் அவன்
திருப்பெயர் சொல்லிடவே நாவிழையும்
இருந்திடின் இன்னும்பல பிறவிகளே அவன்
இருவடி நிழல்தனில் அவைகழியும் ஸாயி  
(திருமுக தரிசனத்தில்...)


உதியெனும் அற்புதத்தை எமக்களித்தான் நேரும்
பிணியெலாம் விலகிடவே வழிவகுத்தான்
விதிவினை எரித்திடவே துனிவளர்த்தான் அவன்
வரங்களை எண்ணியெண்ணி நான்சிலிர்த்தேன் ஸாயி
(திருமுக தரிசனத்தில்...)


துவாரிகா மாயியென்னும் ஒருதலமே சென்று
தரிசனம் செய்தாலே நேரும்நலமே
சுவாசத்தை நிறைத்திருக்கும் ஸாயிபெயரே அதைச்
சொல்லிச்சொல்லி மகிழ்ந்திடும் எந்தனுயிரே
(திருமுக தரிசனத்தில்...)

வீயார்

Friday, November 25, 2016

சாமி பாட்டு எழுத நினைச்சா

சாமி பாட்டு எழுத நினைச்சா சந்தம் வரல
சுருதிப் பாட்டு எழுத நினைச்சா சுருதி சேரல
ஓடிப்போன பத்துநாளா மாடா ஒழச்சதால்
ஒடுங்கிப் போயி படுத்தாலுமே தூக்கம் வரல

வொய்ஃபு காப்பி கப்போட எதிருல நின்னா
ஆதார் கார்டு எங்கேன்னு கேக்கத் தோணுது
நெய்பர் சிரிச்சு ஹலோன்னு வந்து சொன்னாக்கா
நூறு ரூவாய் கேப்பாரோன்னு நெஞ்சு பதறுது

இந்து சிதறும் Ad பேப்பர் நோட்டாத் தெரியுது
எங்க பாரு சில்லறைக்காய் ஆளு அலையுது
இந்தத் திட்டம் நல்லதான்னு சொல்லத் தெரியல
இந்த மாசம் செலவுகம்மி அதான்  தெரியுது

Monday, August 15, 2016

Ramanuja - ஆதாரம்

ஆதாரம்

வலுவான தேகம் வடிவான மனைவி
அளவற்ற செல்வம் ஈதேதும் பயனில்
பூதூர்வாழ் யதிராஜன் பாதார விந்தம்
ஆதாரம் ஆதாரம் ஆதாரம் ஆதாரம்

பலநூறு உறவு பெற்றோரும் மற்றோரும்
குலப்பெருமை அறிவு ஈதேதும் பயனில்
பூதூர்வாழ் யதிராஜன் பாதார விந்தம்
ஆதாரம் ஆதாரம் ஆதாரம் ஆதாரம்

எண்ணரிய கலைகள் அருமறை ஞானம்
பண்செயும் ஆற்றல் ஈதேதும் பயனில்
பூதூர்வாழ் யதிராஜன் பாதார விந்தம்
ஆதாரம் ஆதாரம் ஆதாரம் ஆதாரம்

எண்திக்குப் புகழும் மண்ணாளும் அரசர்
உன்தாளை பணிந்தும் ஈதேதும் பயனில்
பூதூர்வாழ் யதிராஜன் பாதார விந்தம்
ஆதாரம் ஆதாரம் ஆதாரம் ஆதாரம்

ஈகையில் சிறந்தும் இந்திரியம் அடக்கி
மோகத்தை வென்றும் ஈதேதும் பயனில்
பூதூர்வாழ் யதிராஜன் பாதார விந்தம்
ஆதாரம் ஆதாரம் ஆதாரம் ஆதாரம்

வீயார்

Tuesday, March 1, 2016

Baba - என் குருநாதா ...

என் குருவென்று உனையன்றி எவரைநான் கொள்வேன்
என் கவிகளிலே உனையன்றி எவரைநான் புகழ்வேன்
என் பயணத்தில் என்னோடு எப்பொழுதும் வருவாய்
என் இருளான காலத்தில் என்னோடு இருப்பாய்

நீ நீர் கொண்டு விளக்கெரித்தாய் அதுவன்று விந்தை
நீ கார் மேகம் தனைத் தடுத்தாய் அதுவன்று விந்தை
உன் பாதத்தில் கோதாவரி அதுவன்று விந்தை
என் தியானத்தில் குடிவந்தாய் அதுவன்றோ விந்தை

என் பயணத்தில் என்னோடு எப்பொழுதும் வருவாய்
என் இருளான காலத்தில் என்னோடு இருப்பாய்
என் குருவென்று உனையன்றி எவரைநான் கொள்வேன்
என் கவிகளிலே உனையன்றி எவரைநான் புகழ்வேன்

அன் றுன்னோடு சீரடியில் இருந்தார்கள் நல்லோர் நான்
அவர் நாமம் என்றென்றும் என் நெஞ்சில் கொள்வேன்
என் உயிர் காலம் முடிகின்ற வேளைக்கு முன்னே
நான் நீ வாழ்ந்த சீரடியில் வாழ்ந்திடவே வருவேன்

என் பயணத்தில் என்னோடு எப்பொழுதும் வருவாய்
என் இருளான காலத்தில் என்னோடு இருப்பாய்
என் குருவென்று உனையன்றி எவரைநான் கொள்வேன்
என் கவிகளிலே உனையன்றி எவரைநான் புகழ்வேன்

Sunday, February 28, 2016

Baba - மதங்கள் நூறு உலகில் அந்த

மதங்கள் நூறு உலகில் அந்த
மதத்தில் நூறு குருமார்
இதயம் தொட்டுச் சொல்மின் அதில்
இவன்போல் யாரு கிடைப்பார்

(மதங்கள் நூறு...)

இவனது கோவில் தரிசனம் செய்ய
இன்பம் நம்மைத் தொடரும்
கவலை தீரும் குழப்பம் தீரும்
கருத்தில் தெளிவு பிறக்கும்
துனியும் உதியும் தர்மத்தின் வழியில்
சேர்க்கும் இரண்டு வரங்கள்
இனியும் பயமேன் நமது சிரம்மேல்
இவனின் அன்புக் கரங்கள்

(மதங்கள் நூறு...)

தேனால் பாலால் பொன்னால் பொருளால்
செய்வது இல்லை பூசை
ஏழையின் பசிக்கு அன்னம் தந்தால்
அதுவே ஸாயியின் ஆசை
பதினொரு கட்டளை நமக்கென தந்தான்
பாதை அவனே சொல்வான்
எதுவும் அவனது பொறுப்பில் விட்டால்
அவனே பார்த்துக் கொள்வான்

(மதங்கள் நூறு...)

வீயார்

Baba- மண்ணெல்லாம் சீரடியின் மண்ணாகுமா

மண்ணெல்லாம் சீரடியின் மண்ணாகுமா
மொழியெல்லாம் பாபாவின் மொழியாகுமா
கண்ணவனைப் பாராமல் கண்ணாகுமா
கவியவனைப் புகழாமல் கவியாகுமா

சீரடியாம் தலத்தினிலே ஒர் சூர்யோதயம்
ஸாயியினால் ஆனதுபக்தி பூங்காவனம்
வாருங்கள் மனதைசெய்து நிர்மாலியம்
சேவித்தால் வரங்களுண்டு நூறாயிரம்

துனியைக் கண்டு துயரம்தீர்ந்த காட்சியுண்டு
உதியாலே விதியை வென்ற சாட்சியுண்டு
இனியுமொரு துன்பமில்லை என்று மகிழ்வோம்
இவனேநம் தாயுமானான் என்று நெகிழ்வோம்

Friday, March 13, 2015

Vishnu - அரங்கனைக் காண எத்தனை விழிகள்

அரங்கனைக் காண எத்தனை விழிகள்
அவனடி தொழுதிட எத்தனை கரங்கள்
வரங்களை வேண்டி வளங்களை வேண்டி
வணங்கியே நிற்கும் எத்தனை மனங்கள்

(அரங்கனைக் காண...)

அரங்கம் அன்றியோர் கோவிலும் இல்லை
அரங்கன் அன்றியோர் கடவுளும் இல்லை
திருவடி கண்டால் தொல்லைகள் தீரும்
திருமகள் அருளால் பொருள்களும் சேரும்

(அரங்கனைக் காண...)

மறுபிறப்பென்று மாதவன் பணித்தால்
மறுபடி மறுபடி அரங்கினில் பிறப்பேன்
திருவடியதனைச் சிந்தையில் நிறுத்தி
சந்ததம் அவனது நினைவில் இருப்பேன்

(அரங்கனைக் காண...)  வீயார்